தந்தை வயிற்றில் விந்ததுவாக
தாயின் வயிற்றில் கருவதுவாக
தாய் சுமந்தாளது பத்து மாதம்
தந்தை சுமையது இருபது வருடம்.
தந்தை வழியே தாயிடம் விந்து
தந்தைத் தைலம் சினை முட்டை கலந்து
பிண்டம் கருவொரு வாரம் மலர்ந்து
நன்றது முதல் மாதம் துளிர்த்தது.
தாய்நோய் பட்டுத் தன்னலம் தளர்ந்தாள்
தொந்தி சரிய தன்னடை மறந்தாள்.
வாய்ருசி கசந்து மசக்கை யானாள்.
தாயாம் பெருமை நோவு கடந்தாள்.
கருவாய் செழித்து இரண்டாம் மாதம்.
உருவாகித் தலைபின் மூன்றாம் மாதம்
வயிறும் தொடர்ந்து நான்காம் மாதம்
செயல்பலம் முதுகுத் தண்டுடல் மீதம்
ஐந்தாம் மாதம் முகம்வாய் மூக்கும்
கண்கள் செவிகள் ஐம்புலன் அறிவும்
ஆறாம் மாதம் முழுமை பெற்றும்,
ஏழாம் மாதம் இயக்கம் உற்றும்.
எட்டாம் மாதம் கட்டாய் உடலும்
ஒன்பதாம் மாதம் உந்துதல் தொடக்கம்.
பத்தாம் மாதம் பலம்பெற்றுத் துடிக்கும்
உத்தமமாகி நேர்வழித் தலைவரப் பிறக்கும்.
தந்தை வயிற்றில் இரண்டு மாதம்
தாயின் வயிற்றில் பத்து மாதம்.
வந்த உலகினிற் தந்த தாய்தந்தையர்
முந்தி வந்தனம் தகுதெய்வ சிந்தையர்..
குழந்தை பிறந்ததும் எழுந்த மகிழ்ச்சி
வளர்வில் மிகும் வாழ்வின் புகழ்ச்சி.
தாய்தந்தை செய் தவப்பயன் நெகிழ்ச்சி
சேய்க்கால இன்பம் சேய்செய் நிகழ்ச்சி.
கோவில் தெய்வம் வேறெங்கும் இல்லை
வாழ்வில் மேவும் யாரென்றும் சொல்ல,
தாய்தந்தை கடந்து மேலெங்கும் இல்லை.
தாள் அவர் மிஞ்சி வேறென்ன சொல்ல.
சுமந்த வயிறு சுமையென நினைந்தால்,
அமைந்த வாழ்வவர் துணை மறந்தால்,
அல்லலுற்று ஆற்றா அழுங் கண்ணீர்
செல்ல லுற்றுன் செல்வம் அழிக்கும்.
கவிஞர். கொ. பெ. பிச்சையா.
No comments:
Post a Comment