Wednesday, 19 March 2014

என்னைவிட்டுப் போன சிட்டுகள்.

என் சிட்டுகள் எங்கே?
(சிட்டுகள் தினம்)

வானம் எங்கும் தேடுகிறேன்—சிட்டின்
கானம் கேட்க வாடுகிறேன்.
கீச்சின் இசையைப் பாடுகிறேன்.
மூச்சின் அசைவக் கூடுகிறேன்.
தேடித் தேடி ஓடுகிறேன்—என்னைக்
கூடிக் குலவ நாடுகிறேன்..
(வானம்)

சின்னம் வரைந்து ஏங்குகிறேன்-உனது
எண்ணம் நிறைந்து தேங்குகிறேன்.
வண்ணம் நெஞ்சம் உம்போலே
இன்னும் பஞ்சம் தாங்குகிறேன்.
காற்றில் ஊதும் கீற்றின் ஒலி-தினம்
கேட்டுத் தானும் ஆற்றுகிறேன்.
(வானம்)

இறைவன் எனக்கும் பகையில்லை-உன்போல்
சிறகுகள் கொடுத்தால் குறைவில்லை.
துறந்தும் பறந்தாய் தொலைவெல்லை
இருந்தும் இறந்தேன் வழியில்லை.
சுயநலம் தானிங்கு வாழ்கிறது-ஐயோ
பொதுநலம் வீணிங்கு சாகிறது.
(வானம்)

ஊருள் மரங்கள் ஒழிந்தது-கூடும்
கூரைகள் காந்தம் செறிந்தது..
நாடுள் வளங்கள் நலிந்தது.
காடுகள் கழிந்தும் கரைந்தது.
இயற்கை உன்னினம் பெருக்கியது-பாவச்
செயற்கை மண்ணினம் விரட்டியது.
(வானம்)

சிந்திய தானியம் யாருக்கோ-வீணே
சிதறித் தானே கிடக்குதிங்கே.
முந்திய காலம் போனதெங்கே!
அந்திய கோலம் ஆனதிங்கே.
சின்னச் சிட்டே பாடுவதேப்போ-கூடி
என்னைச் சேர்ந்து பாடுவதேப்போ

கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment