Friday, 7 February 2014

தூங்க மனம் கூடவில்லை.

தூங்க மனம் கூடவில்லை.

கோணலான வண்ணஜால வில்லொன்று
வானமுட்டி வளைந்துதான் கிடக்குது.
நானுமதை நிமிர்த்தலாம் என்றுந்தானே
தூண்கொண்டும் ஓடியோடித் தேடுகிறேன்.

அடைப்பட்டக் கடலொன்று விடுவென்று
அலையாடி கரையேற துடிக்குதென்று .
உடைத்துமே மீட்டெடுக்க வெட்டிகொண்டேன்
உந்துஞ்சினம் தாண்டுவதும் சுட்டியென்பேன்..

கோடிகோடி மின்னல்கள் சக்திகொண்டு
கூடாமல் வீணாமோ தான்தொலைந்து!
கூட்டியதை ஒளிதரக் கொண்டுவந்து
ஈட்டத்தான் அலைகிறேன் ஏக்கங்கண்டு.

பகல்வருஞ் சூரியனைப் பிடிக்கலாமா!
திகார்சிறை உள்ளேதள்ளி திருத்தலாமா!
சகலமும் அவனாலே சாதிப்போமா!
அகலவும் அல்லலை ஆயலாமா!

நிலவுங்கூட நிலையின்றி முறையின்றி
அழகுவதனத் தலைக்கன அடக்கமின்றி
திரிவதை வழிமறித்து அடக்கிவைத்து
திரிசங்கு சொர்கமொன்று படைக்கலாமா!

எத்தனைக் கோடிகள் முத்தொளிகள்.
அத்தனையும் வேடிக்கை ஆவதென்ன!
இருந்தும் பொருந்தாத விண்மீன்கள்
இரக்குவம் தெருவிளக்காய் நோவதென்ன!

விரிந்தகடல் இருந்தென்ன தாகந்தானோ!
புரிந்துகொள்ள முடியாதென்ன சோகந்தானோ!
தெரிந்துகொள்ளத் திரைகளாய் கூவலென்ன!
அறிந்துதான் உப்பானேன் தேடென்றதோ!

இயற்கையீந்த செல்வங்கள்  எல்லாமோ!
எட்டிநின்றே எட்டாமல் செல்லலாமோ!
ஏங்கவைத்தும் எம்மையும் வதைப்பதாமோ!
தூங்கமனம் கூடவில்லை தூண்டலாமோ!!
 
கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment