Wednesday, 14 October 2015

விடை பெறூம் வேளை.

விடை பெறும் வேளை!

உதிர்ந்த மலர்கள்
உற்ற தாய் செடியிடம்
என்ன கூறி விடை பெறும்?

"கொடிதந்தாய் பூத்திருந்தேன்.
மடிதந்தாய் காத்திருந்தேன்.
பருவத்தின் வாசனையை
தெரிவித்தேன் தேடிவந்தான்.

ரீங்காரம் பாடிவந்தான்.
ஓங்காரம் கூடிவிட்டோம்.
காதலெனும் மந்திரம்
கண்டறிந்தோம் வண்டும் நானும்..

உண்டதன் நன்றிக்கு
தந்து போனான் சூலுக்கு
அரும்பியதுக் காய்க்கட்டும்!
திரும்பவதும் பூக்கட்டும்!

விடைபெறும் வேளைவரை
கடமைகள் தொடரட்டும்
பூமியதும் நிலையதே
சாமியதும் சுழலுட்டும்"

என்றே மலர் விடை பெற்று
கண்ணீரைக் காணிக்கையாய்
தந்துதிர்த்து செடி நீங்கி
தன்பயணம் முடித்திருக்கும்.

இப்படித்தான் உடலும் உயிரும்
அப்படித் துணிந்திருக்கும்.

"இதற்கு மேலும் வேண்டாம்
இந்த உலகம்.
இங்கே சொர்க்கம் இல்லை.
நரகம் மட்டுமே!

அதிவிரைவு செயற்கைமுறை
புதுவரவு வேளாண்மை
விதி முடிக்கும் நோயரக்கர்
வலிவதைத்து சிதைக்கிறார்.

செலவெட்டும் வரவில்லை.
உழவெட்டும் விலையில்லை.
மழையெட்டும் மரமில்லை
வளமெட்டும் நிலையில்லை.
நீருக்குப் போராடும்
நிலை வரும்முன்
இருவருமே ஒருவரையொருவர்
விட்டு விடுதலையாவோம்."

எனத்தான் துணிந்தும்
உடலும் உயிரும்
ஒன்றுக்கொன்று நன்றிக் கூறி
விடை பெற்றிருக்கும்.

கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment