Tuesday, 6 October 2015

சாமியெல்லாம் சாமிதானே!

உள்ளூர் சாமி!

எத்தனையோ மலையிருந்தும்
அத்தனையும் அழகிருந்தும்
மொத்தமாய் திருப்பதியில்
சத்தியமாய் பெறுவதென்ன!

திரு வரங்கப் பெருமாளும்
இருப்பதும் தான் தெரியாதோ!
சொந்தப் பூமி சாமியெல்லாம்
நெஞ்சம் விட்டுப் போனதேனோ!

பெற்ற தாய் அருமையென்றும்.
வற்று மென்றும் எண்ணலாமோ!
உற்ற மண் பொருளையெல்லாம்
மற்ற மண்ணில் கொட்டலாமோ!

கொடுத்த சாமி மறந்துவிட்டு
அடுத்த சாமி தேடலாமோ!
உரிமை இங்கு வறுமைப்பட்டு
பெருமை எங்கோ சேரலாமா!

தன்னைத் தானே ஏழையாக்கி
அந்நியர் கை ஏங்கலாமோ!
தம்மைத் தாமே கீழாக்கி
தம் திருமை நீங்கலாமோ!

பக்கம் கொண்ட சாமியானால்
சொர்கம் காட்ட மாட்டாராமோ!
சாமி யெல்லாம் சாமிகள்தானே!
சாமியில் கூட பேதங்கள் ஏனோ!

இறைவ னொருவன் என்பதும் பொய்யோ!
உறையும் இடம்பல என்பதும் மெய்யோ!
இருக்கிறான் எவருளும் இதயம் அவனே!.
உருகினால் ஒளிர்வான் உனக்குளும் தானே!

கொ.பெ.பி.அய்யா.


No comments:

Post a Comment