புதைத்தவிதை பூஞ்சோலை ஆகுதம்மா.
சிதைத்தாலும் ஆலமரம் தழைக்குதம்மா.
விதைத்தசொல் வேரூன்றி விளையுதம்மா.
கதையென்ற கற்பனையும் காலமெல்லாம்
எதைநம்பி இப்புவியில் வாழுதம்மா.
ஓளிந்தாலும் மொழிந்தது ஓழியாது.
கலைத்தாலும் கலைந்தது மீளாது.
சிந்தியதை அள்ளலாம் சிதறியது சேராது.
சிந்தித்து மொழிந்தாலும் நிந்தனை ஆறாது.
அடித்தவலி தீரலாம் அப்போதே ஆறலாம்.
முடிந்ததும் தொடரலாம் தொலைந்ததும் துலங்கலாம்.
படித்தது மறந்தாலும் பாடங்கள் இறக்காது
பழித்தது அழிந்தாலும் இழித்தது ஒழியாது.
உலகமிது உள்ளவரை கலகமும் ஆங்காங்கே!
பழகும் மனிதம் விலகுமோ அங்கெங்கே.!!
நல்லதே எண்ணுவோம் உள்ளதே பேசுவோம்.
கொள்ளுவதும் சகோதரம் எல்லோரும் பேணுவோம்.
கவிஞர். கொ. பெ. பிச்சையா.
No comments:
Post a Comment