Thursday, 30 January 2014

தேனான வாழ்வு வீணானதோ!

தேனான வாழ்வு வீணானதே!.

தேனான வாழ்வு வீணாத்தான் போமோ!
தெருவே கதிதானோ!
ஆணான நானும் கூனானேன் தானே!
அறிவை இழந்தேனே!

சேராத சேர்க்கை சேர்ந்திருந்தேனே!
சிறுமை அடைந்தேனே!
தேறாத போக்கை தேர்ந்திருந்தேனே!
தெருநாய் ஆனேனே!

சண்டாளர் கூடும் சாராயக் கடையே
சொந்தம் கொண்டேனே!!
கொண்டாளை மறந்தும் கண்டாளை அலைந்தும்
கதையில் தொலைந்தேனே!

பொழுதை தொலைக்கும் புறம்போக்கு நீசர்
புறக்கடை கிடந்தேனோ!
அழுத புள்ளையின் பாலைப் பறித்து
ஆட்டத்தில் கொடுத்தேனே!

உறவுகள் பதுங்கி தனிமையில் பிதுங்கி
உணர்வுகள் சுமந்தேனே!
வெறுமையின் வலியை தாங்கவும் மயங்கி
மதுவில் விழுந்தேனே!

உழைப்பதை விட்டு தொலைப்பதைத் தொட்டு
உதிரம் காய்ந்தேனே!
அலைகளில் பட்டு கரையினில் ஒதுங்கி
அடங்கியும் ஓய்ந்தேனே!

காக்கை கழுகுகள் காலம் பார்த்துக்
காத்துக் கிடக்கின்றன!
போக்கைத் தேடி பாவி உயிரும்
பறக்கத் துடிக்கின்றதே!

 கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment