Tuesday, 28 July 2015

எமனே உனக்கும் ஆளிலையோ!

எமனே உனக்கொரு சாவிலையோ!

எமனே உனக்கொரு சாவிலையோ!--பிரம்மன்
எழுதிய கணக்கிலும் நீயிலையோ!
துன்பம் என்றொரு துயரிலையோ!--பாழும்
துக்கம் கண்டொரு தயவிலையோ!

கலாமை போன்றொரு தூயோரை--பிறவி
தராமை ஆனாலும் பாவமிலை.
கொடுப்பது போலும் கொடுப்பாயோ!--பிடுங்கி
எடுப்பதும் ஏனோ மாயோனே!

சுமையோ கனமென இறக்கிவிட்டாய்.-இதுவும்
சுகமோ உனக்கென இறப்பு வைத்தாய்.
இமையென வாழும் சிலரேனும் --பூமியில்
இருப்பதில் உனக்கென்ன வலியேதும்?

பிறவி என்பதும் யார் கேட்டார்?--மனிதம்
இரங்கும் நெஞ்சும் யார் கேட்டார்?
உறவில் கூடும் விளையாட்டில்--பாவி
இறப்பில் முடியெனப் பிடிப்பாயோ!

பிறப்பும் இறப்பும் விதியென்பார்.--எதையும்
மறப்பதும் இயற்கை மதியென்பார்.
பிறப்பதும் ஒருநாள் சம்பவமே--மறவா
பொறுப்பினில் இறப்பும் சரித்திரமே!

சனனம் எதற்கு வேண்டாமே--கொடும்
மரணம் எதற்கு வேண்டாமே.
வாழ்வும் வலியும் வேண்டாமே----வீண்
வேலை இறைக்கும் வேண்டாமே.

கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment