எது அறிவு?
எல்லாமே பம்பரமே வல்லானால் ஆடிடுமே!
சொல்லாமல் நின்றதுமே மல்லாந்து சாய்ந்திடுமே!
எந்நாளோ அந்நாளே எவறிவார் இரகசியமே!
சொன்னாலோ என்னாகும் அவனறிவான் அவசியமே!
சுற்றி விட்டால் பூமியில் சுழன்றாடுமே!
தட்டி விட்டால் சாமியில் கழன்றோடுமே!
பற்றவொரு இடமுண்டு பரமன் அடியே!
பற்றவேறு பொருளென்ன நிலமண் மடியே!.
ஆட்டி விட்ட ஆண்டவனும் பார்த்திருக்கிறான்.
ஆடும் போது மாற்றும்விசை சேர்த்திருக்கிறான்.
ஆளும் விதம் சுதந்திரமும் கொடுத்திருக்கிறான்
ஆசை மனம் அடக்கிடத்தான் அறிவிருக்கிறான்.
ஆடும் வரை வாழும்முறை ஞானமென்கிறான்.
தேடும் வழி கூடுமிடம் மோனமென்கிறான்.
இறை எனும் நம்பிக்கை வேதமென்கிறான்.
திரை இடும் தன்னிச்சை பேதமென்கிறான்.
மூடமென அறிவதெல்லாம் தொலைந்து சாகட்டும்.
வேடமென புரிவதெல்லாம் கலைந்து வேகட்டும்.
பாடமென படித்ததெல்லாம் பழகி வாழட்டும்.
பாவமென பழித்ததெல்லாம் அழுகி வீழட்டும்.
பழியென நெஞ்சறிந்தால் பாடம் தப்பாது.
பயமென ஒன்றிருந்தால் பாவம் செய்யாது.
பக்தியென அதுஇருந்தால் பண்பில் தப்பேது?
யுக்தியென தெளிந்திருந்தால் புத்தி பொய்யாது.
சட்டம் ஒழுங்கு காப்பாற்றுமா புறக்காவலும்?
திட்டம் விளங்கு தீர்வாற்றும் அகக்காவலே
புத்திமுத்திப் போனதாலே அச்சம் விட்டதோ!
பக்திவிட்டுக் கெட்டதால ஒச்சம் பட்டதோ!
இயற்கைதான் மூலமென போற்றி வாழுவோம்.
செயற்கையின் சேதம்தனை மாற்றித் தேறுவோம்..
இயற்கைதான் இறையெனவும் மார்க்கம் பழகுவோம்.
செயற்கையை வரமெனவும் ஏற்று வணங்குவோம்.
பகுத்தறிந்து புதுமைகளை கண்டு வாருங்கள்.
தொகுத்துணர்ந்து புதுமைகளை கொண்டு சேருங்கள்.
வகுத்துவைத்த பழமைகளை வாழ விடுங்கள்.
புகுந்தநல்ல வழமைகளை ஆள விடுங்கள்.
எதுஅறிவு எதுதெளிவு என்றே தேடுங்கள்.
எதுபுரிவு எதுதெரிவு நன்றே கூடுங்கள்.
மலர்ச்சியென்றும் மயங்கியொன்றில் மாறும் முயற்சி
வளர்ச்சியென்றும் வழங்கிநன்றும் வாழும் பயிற்சி.
கொ.பெ.பி.அய்யா.

No comments:
Post a Comment