Monday, 11 August 2014

புதியகீதை 3

புதிய கீதை -3 (அடிமைத்தனம் ஒழி)


அடக்கம் அமைதி அழகுதான் ஆனால்
அடங்கி அடிமை பழகாதே!—தூய
ஒழுக்கம் பழக்கம் உயர்வுதான் ஆனால்
ஒடுங்கும் உரிமையால்  பாழ்.!

மனைவி வந்தவள் மங்கலம் தந்தாள்
துணைவி யானள்தோ ழமையே—பிணை
அடிமையாய் ஆக்குதல் ஆணாதிக்கப் பாவமே.
ஆகும் அறியுவாய் ஆணே!

கணவன் என்பதால் கடமை என்பதாய்
நினைந்து மரியாதை செய்யலாம்—தனை
அடிமை ஆக்கித்தான் ஆகும் அதுவும்
உரிமை மதியா விலை.

தலைமை ஒன்றைத் தலையில் சுமந்துதன்
நிலைமை கொன்று நினையே---வலை
பட்டது மீனாய்தோற் றடிமை பட்டேநீ
எச்சை இலையென  வீழாய்!

தொண்டன் உனதூய தொண்டை அடிமையாய்
கொண்டு தலைவன் உனையே—என்றும்தான்
நின்றுமே உன்னைப் படியாய்க் கிடத்தியே
வென்றும் உயர்வான் விதி.

பாச அடிமையும் மோசம் இலையேதான்
வேச அடிமையே தோசம்தான்---நீசனவன்
ஆசை மயக்கி அடிமையாக்கி அதனை
காசாக்கித் தானேதான் வாழ்வான்.

உன்னை மறந்தும் உறவைப் பிரிந்தும்தான்
பெண்ணைத் துறக்கவும் பண்ணுவான்—தன்தலை
எண்ணி அடிமையாக்கி எல்லாம் அவன்மாயை
ஒன்றில் சலவையும் செய்வான்.

வல்லார் அடிமையே வன்மை பழக்குமே
நல்லார் படிமைதான் நன்மையே—வெல்லாமை
அச்சம்தான் வீணடிமை செய்யும் அதனாலது
துச்சமே தூக்கி எறி!

மானமும் ஈனமும் மாய்த்துநீ மாண்டபின்
ஏனமே கெட்டுப்பின் கீழ்உன்னால்---வானமும்
நாணியே பொய்க்கும் அடிமையே பாவம்நீ
வீணேதான் வாழும் பிணம்.

உன்னை மதித்துமே தன்னை உயர்த்தவே
என்றும்நீ சேவை இயற்றியே!—கொன்று
அடிமையும் வென்றும் மடமைகள் நின்றே
உரிமை சமூகம் வாழ்க!


கொ.பெ.பி.அய்யா.


தொடரும்.........

No comments:

Post a Comment