Monday, 29 December 2014

பாரதிப் பெண்.

பாரதி கண்ட புதுமைப் பெண்

பாரதி கண்ட புதுமைப் பெண்
பாரதம் நின்றிடும் உன் பின்.
சாரதி அவன்தான் பாரதி.
ஆரெதிர் நிற்பார் பார்வதி.

தர்மம் தெரிவதும் தூரம்தான்.
தடங்கல் கடப்பதும் நேரம்தான்.
கரடும் முரடும் பயணம்தான்
கண்டு தொடுவதும் கடினம்தான்.

மழைக்கும் முன்னே இடிமிரட்டும்
அதையும் தாண்டி அதுபொழியும்
களைக்குப் பயந்தால் விவசாயம்
களஞ்சியம் சேர்க்க உதவாதாம்.

பிள்ளைப்பேறும் கடுமைதான்.
இல்லை அதுபோல் கொடுமைதான்.
மரணம் அருகினில் இருந்தாலும்
மகவினைக் கண்டதும் மறந்துவிடும்.

பட்டினி என்பதும் பாவமடா.
பசிப்பது என்பதும் சாபமடா.
தட்டில் படையல் யோகமடா
தட்டிப்பறிப்பவன் நீசனடா.

வறுமை இல்லா வாழ்க்கையதை
வாழ உழைக்கும் கர்மமதை.
ஏழை இல்லா உலகமதை
நாளை எழுதும் தர்மம் அதை
.
விடியல் கூடி வளர்கிறது.
விளங்கும் தர்மம் ஒளிர்கிறது.
பாவம் பதுங்கி ஒளிகிறது
சாபம் தீண்டி அழிகிறது.

தொடர்ந்தும் தர்மம் தோற்பதில்லை
கிடந்தும் தன்பணி சோர்வதில்லை.
படர்ந்தும் பாவம் படும் வேளை
முடித்தும் நாட்டும் திருநாளை.

பாவியர் கூட்டம் பதறுதடா.
பாவ வலையில் கதறுதடா.
தேவியின் வேட்டை தொடருதடா.
திசைகள் நான்கும் அதிருதடா.

சக்தியின் வடிவம் வளமாக
பக்தியின் படிவம் பலமாக
வெற்றியின் முழக்கம் தமதாக
சுற்றியும் விளங்கும் தமிழாக.

கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment