ஏன்தான் மனிதன் இப்படி?
ஏன்தான் மனிதன் இப்படி இருக்கிறான்
எனக்கும் ஒன்றும் புரியவில்லை.
வீண்தான் பேசி விளக்கிட முயன்றால்
விளையும் பயனும் தெரியவில்லை.
நான்தான் தலைவன் என்றும் அவனவன்
நாடகம் எழுதி நடிக்கிறான்.
மான்தான் நிசத்தில் ஓடுது என்றே
மயங்கி நரியிடம் மாட்டுகிறான்.
தேன்தான் வாயில் ஒழுகுது என்றே
தேடியும் மனிதன் ஏந்துகிறான்.
தான்தான் வாழ மந்திரத் தலைவன்
தந்திரம் உதிர்ப்பதில் வீழுகிறான்,
பேன்தான் தலையில் மேய்வது கண்டே
பொறுக்கி நசுக்க யோசிக்கிறான்.
சாண்தான் வயிறெனத் தானும் பின்னே
சமரசம் ஆகியும் யாசிக்கிறான்.
ஆண்தான் பெண்தான் உண்மை யென்றால்
அதுதான் தன்மை உண்டென்றால்.
வான்தான் நமக்கு மேல்ஒன் றென்றால்
ஏன்தான் நாமெவற்கும் கீழென்றோ?
வான்தான் சாட்சி வைத்து வாழ்வதற்கு
வணக்கமும் இறைக்கன்றி வேறெவற்கு?
தான்தான் தர்மமென வாழ்வோருக்கு
தாயன்றி தெய்வமென துணையெதற்கு?
கொ.பெ.பி.அய்யா.

No comments:
Post a Comment